<$BlogRSDURL$>

Wednesday, October 06, 2004

இருள்


எண்ணங்களின் குப்பைகளால் நிரம்பிய மனது. அடிக்கடி கிளறுவதால் வலிக்கிறதேயன்றி ஆறுதல் இல்லை. நினைவுகளை மட்டும் சுமந்து கொள்வதால் என்னுள் ஏராளமாய் வெற்றிடங்கள். வெறுமைகளைச் சுவாசிப்பதால் இருதய அதிர்வுகள் சீரடைவது தாமதிக்கின்றது. சடுதியில் ஓடி மறையும் பொழுதுகளையெல்லாம் உபயோகமில்லாக் கல்லறையில் சேமிக்கிறேன். மீண்டும் மீண்டும் எழுந்து ஆர்ப்பரிக்கிற மன அலைகளின் ஓட்டம் அடிக்கடி தடைப்படுகிறது. உணர்வுகள் சிறைப்படுகின்றன. ஜன்னலுக்கு அருகே அமர்ந்து கொண்டு வெளியில் தெரியும் தொடுவானின் நிலைத்தன்மையை எத்தனை நாள்தான் யோசிப்பது? பறவைகளின் சிறகுச்சத்தமும் மழைநீரின் ஸ்பரிசப்புள்ளிகளும் நிலவின் வெளிச்சப்பார்வையும் அந்நியப்படுகின்றன.சூழ்நிலைக்கைதிக்கு விடுதலை ஏது? அறிவுக்கும் மனதுக்குமிடையேயான போராட்டத்தில் அறிவு அடிக்கடி தோற்றுப்போகிறது. காற்று வெளியில் பயணித்துக் கொண்டிருந்த கவிதை வரிகள் பாதி தூரத்திலேயே வசமிழந்து மறைந்துபோகின்றன. வார்த்தைகளைத் தேடித் தேடியே மொழியின் இலக்கணங்கள் மறந்துவிடுகின்றன. மௌனங்களால் பேச முடிவதில்லை. உற்று நோக்கும் ஆவலும் உள்வாங்கும் திறனும் சிதைவடைந்து கொண்டே வருகின்றன. சுழியில் தொடங்கிய எண்ணப்பரப்பின் விரிசல் கந்தழியில் முடிவடைகிறது. விளிம்பு விலகல் அடையும் நினைவுகளும் அக எதிரொளிப்பாகும் சிந்தனைகளும் மோதிக்கொள்வதால் குழப்ப வரிகளே இறுதியில் எஞ்சுகின்றன. மனதினைத் திரைகளால் மறைத்துக்கொண்டும் கண்களையும் மூடிக்கொண்டும் மெதுவாகச் சிந்தித்தாலும் சிதிலமடைந்த நினைவுகளே மேலோங்குகின்றன. கதிர் சுருங்கிப்பின் நிலா விரிந்தாலும் கனவுகள் மட்டும் இடைவிடாமல் தொடர்கின்றன. எங்கேயோ எப்போதோ கேட்கும் சிறு குழந்தையின் அழுகுரலில் பிரபஞ்சத்தில் அணுக்களெல்லாம் கரைந்து போகின்றன.

|

This page is powered by Blogger. Isn't yours?