<$BlogRSDURL$>

Wednesday, October 06, 2004

இருள்


எண்ணங்களின் குப்பைகளால் நிரம்பிய மனது. அடிக்கடி கிளறுவதால் வலிக்கிறதேயன்றி ஆறுதல் இல்லை. நினைவுகளை மட்டும் சுமந்து கொள்வதால் என்னுள் ஏராளமாய் வெற்றிடங்கள். வெறுமைகளைச் சுவாசிப்பதால் இருதய அதிர்வுகள் சீரடைவது தாமதிக்கின்றது. சடுதியில் ஓடி மறையும் பொழுதுகளையெல்லாம் உபயோகமில்லாக் கல்லறையில் சேமிக்கிறேன். மீண்டும் மீண்டும் எழுந்து ஆர்ப்பரிக்கிற மன அலைகளின் ஓட்டம் அடிக்கடி தடைப்படுகிறது. உணர்வுகள் சிறைப்படுகின்றன. ஜன்னலுக்கு அருகே அமர்ந்து கொண்டு வெளியில் தெரியும் தொடுவானின் நிலைத்தன்மையை எத்தனை நாள்தான் யோசிப்பது? பறவைகளின் சிறகுச்சத்தமும் மழைநீரின் ஸ்பரிசப்புள்ளிகளும் நிலவின் வெளிச்சப்பார்வையும் அந்நியப்படுகின்றன.சூழ்நிலைக்கைதிக்கு விடுதலை ஏது? அறிவுக்கும் மனதுக்குமிடையேயான போராட்டத்தில் அறிவு அடிக்கடி தோற்றுப்போகிறது. காற்று வெளியில் பயணித்துக் கொண்டிருந்த கவிதை வரிகள் பாதி தூரத்திலேயே வசமிழந்து மறைந்துபோகின்றன. வார்த்தைகளைத் தேடித் தேடியே மொழியின் இலக்கணங்கள் மறந்துவிடுகின்றன. மௌனங்களால் பேச முடிவதில்லை. உற்று நோக்கும் ஆவலும் உள்வாங்கும் திறனும் சிதைவடைந்து கொண்டே வருகின்றன. சுழியில் தொடங்கிய எண்ணப்பரப்பின் விரிசல் கந்தழியில் முடிவடைகிறது. விளிம்பு விலகல் அடையும் நினைவுகளும் அக எதிரொளிப்பாகும் சிந்தனைகளும் மோதிக்கொள்வதால் குழப்ப வரிகளே இறுதியில் எஞ்சுகின்றன. மனதினைத் திரைகளால் மறைத்துக்கொண்டும் கண்களையும் மூடிக்கொண்டும் மெதுவாகச் சிந்தித்தாலும் சிதிலமடைந்த நினைவுகளே மேலோங்குகின்றன. கதிர் சுருங்கிப்பின் நிலா விரிந்தாலும் கனவுகள் மட்டும் இடைவிடாமல் தொடர்கின்றன. எங்கேயோ எப்போதோ கேட்கும் சிறு குழந்தையின் அழுகுரலில் பிரபஞ்சத்தில் அணுக்களெல்லாம் கரைந்து போகின்றன.

|

Wednesday, September 01, 2004

முதலாமாண்டு மண நிறைவு நாளில் ( ஆகஸ்ட் 31) தந்தையின் வாழ்த்துப்பா:

மணமுடித்து ஓராண்டு நிறைவுசெய்யும் செல்வங்காள்!
குணமிணைந்து குறைவின்றி வாழ்கின்ற திலகங்காள்!
நீடுபுகழ் தேடுகல்வி நிறைந்திட்ட நெஞ்சுடையீர்!
நாடுபுகழ் தேடிவர நலமுடன் வாழ்த்துகிறோம்!
இன்பம் நனிசிறக்க இனிமை நலம் சுரக்க
அன்புள்ளம் ஒருசேர அகமகிழ்ந்து வாழ்த்துகிறோம்!

|

Tuesday, July 20, 2004

உடன் பணி  புரியும்  சகா ஆட்ரி
 
 

கடித்த நகங்கள் துப்பாது விழுங்கும்
பிடிக்காத பழக்கமுனக் கெதுக்கு? - துடிப்பான
ஆட்ரிநீ வளர்த்திடு நகங்கள் செல்பேசி
பேட்டரி கழற்று வதற்கு!

|

Wednesday, June 02, 2004

எனது நண்பன் ராஜ்குமார்


சதையில்லா எலும்பே வாழைப்பழக் குரங்கே
உதைவிட்டால் ஒடிந்துவிடும் உடம்பே- கதைவிட்டுக்
காலையிலே ஆபீஸ்போய் கம்ப்யூட்டர் நீபார்த்து
வேலைசெஞ்சு ஒம்பொழப்ப ஓட்டு

ராஜ்குமார் (என்கிற) கர்ணன்

பஞ்சத்தில் அடிபட்ட பரதேசிப் பயபோல
அஞ்சுகாசு விடாம சேத்துவச்ச - கஞ்சன்நீ
அமுக்குதாசு காசயெல்லாம் பத்திரமா பைக்குள்ள
கமுக்கமான கர்ணமகா ராசு


|

Friday, April 23, 2004

ஒரு தேனீர்
பருகியவுடன் மரணம்
(use and throw)காகித தம்ளர்!
|

Sunday, April 18, 2004

யதார்த்தம்

களவுநிலைக் காதலிலே கண்களின் பார்வையெல்லாம் ஒக்கும்!
கற்புநிலைப் பார்வையிலே கண்களின் தோற்றமே தொக்கும்!
|
?

உயிருள்ள போழ்தே தினம் சாதலா?
உணர்வுகளின் ரீங்காரம் இதுதான் காதலா?

|

Sunday, March 28, 2004

ஆல்ப்ஸ்


வானின்சுவர் முட்டுமட்டும் வளர்ந்த ஆல்ப்ஸ் மலை
மானுடமே கண்டுமகிழ இதியற்கை விரித்த வலை

வெள்ளைப்பனி மேலாடை பச்சைமரம் கீழாடை
உருகிவரும் பனியாலே உடல்முழுதும் நீரோடை

மலையுடலில் ஊர்ந்துசெல்ல அமைந்த இரயில் பாதை
அழுத்தம் மிகக்குறைவதனால் அடைத்திடுமே காதை

சிகரம்தொட கம்பிமீது சிறுமிதவைப் பயணம்
சின்னதாக இடறிவீழ்ந்தால் செலவிலா மயானம்

உயிர் நரம்பை ஊடுறுவும் குளிர்ந்த பனிக் காற்று
உடைகள்பல அணிந்து நீயும் உனதுருவம் மாற்று

உச்சிமலை சென்றடைந்தோம் உறையும்பனி கண்டுகொண்டோம்
அருகிலுள்ள நாடுகளும் தெரியவர மகிழ்ந்து நின்றோம்

பனியுருகி மலையொழுகி அமைந்த ஏரிப்பரப்பு
நாற்புறமும் கரைகளென மலையமை வதுமிதன் சிறப்பு

பசும்போர்வை விரித்ததுபோல் மலையடியின் தோற்றம்
மாடுகளும் குதிரைகளும் புல்மேய்ந்திதைப் போற்றும்

ஆகமொத்தம் இயற்கையெழில் கொஞ்சும் ஆல்ப்ஸ்மலை
அத்தனை அழகும் சொன்னேன் ஏதிதற்கு விலை?

- ஜெர்மனியின் தென்பகுதி ஆல்ப்ஸ் மலை, சுக்ஸ்பிட்ஸ் சிகரம்.

|

This page is powered by Blogger. Isn't yours?